ஞாயிறு, 25 அக்டோபர், 2015




                       தொடரும் .....



பேருந்தின் முன் இருக்கையில்
தாயின் தோல் மீது படர்ந்திருக்கும்
காற்றை மேலும் கீழுமாக
அளந்து கொண்டிருந்த
குழந்தையின் முகம் !

ராஜயோகம் கிடைக்குமென
இருபது ரூபாய்க்கு நரிக்கொம்பு
வாங்க சொல்லும் நரிகுறத்தியின்
சாராய நெடி படிந்த
ஒற்றை குரல் !

யாசகம் வேண்டி  நிற்பவனிடம்
வெகுநேர என்
யோசைனைக்குள் நகர்ந்துவிடுபவனின்
வெளிறிய வானம்  பார்க்கும் கை

அவசரம் என சொல்லிகொள்ளும்
இருசக்கர பயணத்தின் போது
பள்ளியில் விடச் சொல்லி
வழி  மறிக்கும் ​ _ என்
வாழ்வின்  நீளத்தை
அளந்து கொண்டே  வந்து சேரும்
 சிறுவனின்  கால்கள்!

அரசாங்க பணமெடுக்க
வங்கியில் சலாணோடு
நெருங்கி வந்த கிழவியிடம்
வரிசை  நீண்டுவிட்டதாக
செல்லும் என்னை
மிரண்டுபோன கன்றுக்குட்டியைப்
போல்  கண்கள்

இப்படி
ஏதாவது  ஒரு முகம்
ஏதாவது  ஒரு குரல்
 ஏதாவது  ஒரு கை
ஏதாவது  ஒரு கால்
 ஏதாவது  ஒரு  கண்
என்னை  தொடர்ந்து
கொண்டேதான் இருக்கிறது !                                                                                                                           

 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக